Thursday, May 4, 2023

ஒரு குட்டி ஸ்டோரி “நடையும் நானும்”

(ஒரு பக்கத்தில் சொல்லிவிடலாம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன் ஆனால் எழுத ஆரம்பித்தவுடன் அந்த காலகட்டத்திற்கே என்னை அழைத்துச்சென்றுவிட்டது,பொதுவாக நான் எழுத ஆரம்பித்தால் எழுத்துகளின் போக்கிலேயே விட்டுவிடுவேன் அப்படித்தான் இந்த நடையும் நானும் ஸ்டோரியும்.)

நடப்பது எனக்கு பிடித்த ஒன்று எப்பொழுது கவினர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய எண்ணங்கள் ஆயிரம் என்னும் புத்தகத்தை படித்தேனோ அன்று தோன்றியது நடக்கவேண்டும் என்று

1994 கடைசி நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் என்று நினைக்கிறேன் முதன் முதலாக சென்னையில் இருந்து தனியாக மூணார் செல்கிறேன் அப்பொழுது சென்னையில் உள்ள திருவள்ளுவர் போக்குவரத்துக்கழுகம் பேருந்து நிலையத்திற்கு வெளியே தெருவோர புத்தக கடையில் 7 ரூபாய் கொடுத்து வாங்கிய புத்தகம்தான் கவினர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய எண்ணங்கள் ஆயிரம்

இன்றைய தலைமுறையினருக்கு அந்த காலகட்டத்தில் இருந்த போக்குவரத்து கழகங்களின் பெயர்கள் தெரிய வாய்ப்பில்லை ஆம் எல்லாம் திராவிடம் தமிழையும் தமிழின் வரலாற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டே இருக்கிறார்கள்

(அன்று இருந்த போக்குவரத்து கழகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பண்டைய காலத்தில் ஆட்சி செய்த பேரரசுகளின் பெயரில் இருந்தது,

சில உதாரணம் மதுரை பாண்டியன் போக்குவரத்துக்கழகம்,சென்னை பல்லவன் போக்குவரத்துக்கழகம்,திருச்சி சோழன்  போக்குவரத்துக்கழகம்,கோயம்புத்தூர் சேரன் போக்குவரத்துக்கழகம்,திருநெல்வேலி கட்டபொம்மன் போக்குவரத்துக்கழகம்,திண்டுக்கல் இராணிமங்கம்மாள் போக்குவரத்துக்கழகம்,வேலூர் பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்துக்கழகம் இப்படி பெயரில் இருந்தது இதில் சென்னையில் இருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் செல்லும் சேவை திருவள்ளுவர் போக்குவரத்துக்கழகம் என்று இருந்தது.) 

அந்த புத்தகத்தை படித்து முடித்த போது எனக்கும் எழுதவேண்டும் என்று ஒரு உந்துதல் ஏற்பட்டது நிறைய விசயங்கள் அந்த புத்தகத்தில் சொல்லியிருப்பார் எல்லாம் எளிய முறையில் புரியும்படி இருக்கும்

நான் முதன்முதலில் தனியாக கல்கத்தாவிற்கு 1997 ல் சென்றேன் ஆங்கிலமும் தெரியாது இந்தியும் தெரியாது இங்கிருந்து போகும்போதே கொஞ்ச ஆங்கில வார்த்தைகளை நண்பர்களிடம் கேட்டு ஒரு பேப்பரில் எழுதி எடுத்துச்சென்றேன் சென்னையில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயிலில் போனேன் மறுநாள் மதியம் 01:30 மணிக்கு

கல்கத்தாவின் ஹவுரா இரயில் நிலையத்திற்கு செல்லும் முன்னே இரயிலில் இருந்து பார்த்தபோது ஹவுரா  பாலம் என்னை வரவேற்றது அதன் அழகில் மயங்கிப்போனேன் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளித்தது

இப்பொழுதும் எனக்கு நினைவிருக்கிறது நான் பார்த்த அந்த காட்சி பாலத்தின் கிழக்கு பக்கம்தான் நான் பார்த்த முதல் காட்சி  உயரமான இரும்பு கம்பிகளுக்கு வெள்ளி மூலாம் வண்ணம் பூசப்பட்ட அந்த பாலம்

இரயில் தமிழ்நாட்டை விட்டு ஆந்திர எல்லையை தொட்டவுடனே காதில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேச்சு கேட்பது குறைந்து தெலுங்கும் இந்தியும் கேட்க ஆரம்பித்தது ஒரு பகல் ஒரு இரவு அடுத்த நாள் மதியம் வரை பயணம்

ஹவுரா வரும்வரை மூன்று மொழிகள் கொஞ்சம் காதில் விழுந்துகொண்டே இருந்தது தெலுங்கு இந்தி ஒரியா

இறங்கினேன் நான் போகவேண்டிய இடத்திற்கு செல்ல வழிகேட்கவேண்டும் யாரிடம் கேட்பது எப்படி கேட்பது ஒன்றுமே புரியவில்லை நண்பர்கள் எழுதிகொடுத்த பேப்பரில் இருந்த அந்த ஆங்கில வார்த்தையை ஹவுரா இரயில் நிலையத்தில் இருந்த உதவி மைய அறையில் ஒரு பெண் இருந்தார் நல்ல கலர் உதட்டில் சிகப்பு நிற சாயம் பார்ப்பதற்கே ரொம்ப அழகாக இருந்தார் அந்த பெண்மணி அந்த பெண்மணி மட்டுமல்ல அங்கிருந்த எல்லா பெண்களுமே ரொம்ப அழகாக இருந்தார்கள் அவர்கள் பேசுவது இந்தியா வங்காள மொழியா என்னவென்றே தெரியவில்லை

ஒருவித பதற்றத்துடன் அந்த பெண்மணியிடம் கேட்டேன் அந்த பெண்மணி வேகமாக கொஞ்சம் கத்தி ஏதோ சொன்னார் ஒண்ணுமே புரியல

அந்த பெண்மணி மட்டுமல்ல அங்கிருப்பவர்கள் பேசுவது எதுவுமே புரியல கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது அன்று

அப்பொழுதுதான் கவினர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது எந்த புதிய ஊருக்கு சென்றாலும் முதலில் அங்கு கொஞ்ச தூரம் நடந்து செல்லுங்கள் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கண்ணால் கவனியுங்கள் மொழி புரியாவிட்டலும் அவர்கள் செய்கையை புரிந்துகொள்ளமுடியும் அதைதான் அன்று நான் செயல்படுத்தினேன்,

ஹவுரா இரயில் நிலையத்தை விட்டு வெளியே போனேன் புதிய ஊர், புதிய மொழி, புதிய உடை, புதிய கலாச்சாரம் ரொம்பவே வித்தியசமாக இருந்தது அவர்கள் பாக்கு போடும் பழக்கம் உள்ளவர்கள் அதனால் ஆங்காங்கே எச்சில் துப்ப தனியாக ஒரு மண் தொட்டி வைக்கப்பட்டிருந்தது

ஹவுரா இரயில் நிலையம் ரொம்ப பிஸியாக இயங்கிக்கொண்டிருந்தது மக்கள் அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தார்கள் முதலில் தெருவோர கடைகளை கவனித்தேன் டீ குடிக்கவேண்டும், சாப்பிடவேண்டும் எல்லாத்துக்கும் காசு கொடுக்கணும் அதுக்கு எவ்வளவு காசுன்னு எனக்கு தெரியனும் அன்று அங்குள்ள தெருவோர கடைகளில் டீ ஒரு ரூபாய் தான் அதுவும் மண்ணால் செய்யப்பட்ட அழகான குடுவையில் சூடாக கொடுப்பார்கள் நன்றாக இருக்கும்

அன்று செல்போன் இல்லை,ஸ்மார்ட்போன் இல்லை ஜிபிஸ் இல்லை ஒருவழியாக ஹவுரா இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தேன் எனக்கு இந்தியும் தெரியாது வங்காள மொழியும் தெரியாது அங்கிருப்பவர்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை நான் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த ஒரு நான்கு வார்த்தைகள்தான்

என்ன செய்வதென்று தெரியாமல் ஹவுரா பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்தேன், அன்றே அங்கு மினி பேருந்துகள் அதிகம் இருந்தது அன்றுதான் தெரிந்தது நமது தமிழ்நாடு போக்குவரத்து துறையிலும் சரி மற்ற சுற்றுப்புற சுகதரத்திலும் சரி கல்கத்தாவைவிட எவ்வளவோ மேல் என்று

சுற்றிலும் நோட்டமிட்டேன் நிறைய பீடா கடைகள் இருந்தது கொஞ்சம் தள்ளி துரத்தில் ஒரு மெடிக்கல்ஷாப் கடையை பார்த்தேன் மெடிக்கல்ஷாப்பில் ஆங்கில புழக்கம் இருக்கும் உடனே அங்கு சென்று நான் எழுதி வைத்திருந்த பேப்பரில் உள்ளதை படித்து அங்கிருந்தவரிடம் கேட்டேன் அவர் இங்கிருந்து எப்படி போகவேண்டும் எந்த பஸ்ஸில் ஏறவேண்டும் எங்கு இறங்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் சொன்னார்

நான் பேருந்தில் செல்லாமல் நடந்து போகலாம் என்று தீர்மானித்து நடக்க ஆரம்பித்தேன் முதல் பயணம் கம்பீரமான அழகான ஹவுரா பாலத்தின் வழியாக நடந்து சென்றேன் நடைபயணம் ஆரம்பமானது

குட்டி ஸ்டோரி தொடரும்.......

 

No comments: